×

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கண்காட்சிகள் இணைவழியாக நடத்த ஏற்பாடு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர், நவ.27: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கண்காட்சிகள் இணைவழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் புத்தாக்க அறிவியல் மானக் விருதிற்காக 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான மாநில அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுகுறித்து மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய அறிவியல் புத்தாக்க நிறுவனம் ஆகியவை அனுப்பிய சுற்றறிக்கையின்படி மாநில அளவிலான கண்காட்சிகள் இணைய வழியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகள் நடத்துவது தாமதமானது. இந்நிலையில் மாநில அளவிலான கண்காட்சிகளை இணைய வழியில் நடத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய புத்தாக்க நிறுவனம் ஆகியன இணைந்து புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளன. தனிப்பட்ட கணினி அல்லது கைபேசி மென்பொருள் இப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய அறிவியல் செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்போன் மற்றும் இணையம் வழியாக அனுப்ப வேண்டும். இதற்கான இறுதித்தேர்வு வரும் 25ம் தேதி நடக்கும் என அறிவியல் தொழில்நுட்பத்துறை வரையறை செய்துள்ளது. இதுபற்றிய விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் அனுப்பப்பட்டுள்ளன. பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இந்த தகவலை குறிப்பிட்ட ேததிக்குள் அம்மாணவவர்கள் தங்களுடைய செயல்முறைகளை அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் மென்பொருளைப் பயன்படுத்துவது சார்ந்த மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட இணைய வழி கலந்தாய்வுக் கூட்டத்தை தேசிய புத்தாக்க நிறுவனம் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தவுள்ளது. எனவே அந்தந்த மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களைப்பற்றிய விவரங்களையும் தயார் செய்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு இன்றுக்குள் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Director of School Education ,school students ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு