×

செங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவர் புயலை எதிர்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் தயார்

மாமல்லபுரம்: மாமல்லபுரம்  காரைக்கால் இடையில் நிவர் புயல் கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் பொதுபோக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்தது. புயல் முன்னெச்சரிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி வடக்கு மாமல்லபுரம், வெண்புருஷம், மீனவர் பகுதி, பூஞ்சேரி, தேவனேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான பட்டிப்புலம், புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, திருவிடந்தை, மணமை, பையனூர் ஆகிய பகுதியில் உள்ள சமுதாயக்கூடம், திருமண மண்டபம், பள்ளி, கல்லூரிகளில், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் குடிநீர் வசதிக்காக பெரிய தண்ணீர் டேங்கர் லாரி, மரம் வெட்டும் இயந்திரம், மணல் மூட்டைகள், தண்ணீர் தேங்கி நின்றால் அகற்ற பொக்லைன் இயந்திரம், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக டீசல் ஜெனரேட்டர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், ரப்பர் படகு ஆகியவை தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் நேற்று மதியத்துக்கு பின், 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்கவேண்டும், பெற்றோர் தங்களது குழந்தைகளை நீர்நிலைகள், தண்ணீர் அதிகம் தேங்குமிடம் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் 61 ஊராட்சிகள் செயல்படுகின்றன.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பேர் கொண்ட குழு இரவு, பகலாக ஊராட்சிகளை கண்காணித்து வருகிறது. மழைநீர் சூழ்ந்த கிராமங்கள் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து மழைநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் பாதுகாப்பாக தங்கவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை 3 பேர் குழுவினர் கண்காணிக்கின்றனர். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தால் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக, அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பொக்லைன் இயந்திரம் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்றும் வகையில் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
நிவர் புயல் இன்று மதியம் மாமல்லபுரம்  காரைக்கால் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் லேசான கடல் சீற்றம் இருந்ததால் மாமல்லபுரம் கொக்கிலமேடு, புது எடை யூர்குப்பம், வெண்புருஷம், பட்டிப்புலம் குப்பம், நெம்மேலி குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சிலர் கடலுக்குள் செல்லாமல் கரையில் நின்று தூண்டில் போட்டு மீன்பிடித்தனர். இந்நிலையில், நேற்று மதியம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் 15 அடி உயரத்தில் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. நகர பகுதியில் லேசான மழை பெய்தது. இதனால், மீன்பிடி படகுகள், வலைகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : storm ,districts ,Nivar ,Chennai ,Kanchipuram ,
× RELATED வேலூர் 1வது மண்டலத்தில் தூய்மை...