×

வடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி குமரியில் தீயணைப்பு துறை வெள்ள மீட்பு ஒத்திகை தயார் நிலையில் கமாண்டோ வீரர்கள்

நாகர்கோவில், நவ.22 : குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நேற்று குளத்தில் வெள்ள மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வருகிறது. நவம்பர் இறுதி வாரத்தில் இருந்து மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரி மாவட்டத்திலும் தற்போது 300க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓகி புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை அதிகரித்தால் ஏற்படும் வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும், வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், தோட்டியோடு அருகே உள்ள கருப்புக்கோடு குளத்தில் நேற்று வெள்ள மீட்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில்  நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் நிலைய அலுவலர்கள் துரை (நாகர்கோவில்), ராஜா (தக்கலை) மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி கொண்ட மக்கள் அவர்களிடம் உள்ள எரிவாயு சிலிண்டர், லாரி டியூப், பயனற்ற தண்ணீர் பாட்டில்கள், கேன்கள், வாழைத்தண்டு, பிளாஸ்டிக் குடம் மற்றும் தேங்காய் நெத்து போன்ற பொருட்களை கொண்டு தங்களை தாங்களே எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றியும் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். மேலும் ரப்பர் படகு மூலம் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கால்நடைகளை எப்படி? காப்பாற்ற வேண்டும் என்பதையும் விளக்கினர். தண்ணீரில் மூழ்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர்.

மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெள்ள மீட்பு ஒத்திகையை நேரடியாக பார்வையிட்டார். கல்குளம் வட்டாட்சியர் ஜெகதா, வருவாய் ஆய்வாளர்கள் சேவியர், அருள்சேகர், வில்லுக்குறி கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ், குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். 108 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டு இருந்தன. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு கூறுகையில், குமரி மாவட்ட தீயணைப்பு துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் உள்ளனர். தற்போது தேவையான மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

Tags : Commandos ,fire department ,Kumari ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு