×

சீர்காழியில் புதர் மண்டி கிடக்கும் அரசு அலுவலகங்கள் சாலை

சீர்காழி, அக்.29: சீர்காழியில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலை புதர் மண்டி கிடக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படும் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கிளை சிறைச்சாலை, பொது சேவை மையம், ஆதார் மையம் அனைத்தும் ஒரே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் இருபுறங்களிலும் புதர்கள் மண்டி காடுகள் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் சாலைகளின் இருபுறமும் புதர்கள் மண்டி கிடப்பதால் இந்த பகுதியை சிலர் மலம், சிறுநீர் கழிக்க பயன்படுத்துகின்றனர்.

இதனால் இந்த சாலைகளில் எப்போதும் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த சாலையை கடக்கும்போது பொதுமக்கள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இருபுறங்களிலும் மழை நீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை அச்சுறுத்தி வருகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு அலுவலகங்கள் செயல்படும் இந்த சாலையில் அதிகாரிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் இருபுறங்களிலும் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என மனம் வருவதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள புதர்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Offices Road ,Budar Mandi ,Sirkazhi ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!