×

இயற்கை முறை விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள் உதவி இயக்குனர் விளக்கம்

பரமக்குடி, அக்.22:  இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு உதவி இயக்குனர் சக்தி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார். அங்கக வேளாண்மை என்பது காலங்காலமாக விவசாயிகள் மேற்கொண்டு வரும் பாரம்பரிய விவசாயம். செயற்கையான ரசாயன ஊட்ட முறைகள், பயிர்பாதுகாப்பு முறைகளை தவிர்த்து, இயற்கையில் கிடைக்கக் கூடிய தொழு உரங்கள், உயிர் உரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் உயிர் கட்டுப்பாட்டு காரணிகளை கொண்டு மேற்கொள்ளும் பயிர் பாதுகாப்பு முறையாகும். இயற்கை வழி வேளாண்மை முறையில், சாகுபடி செய்யப்பட்ட வேளாண்மை தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களை விவசாயிகள் தனித்துவத்துடன், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தில் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வழி வேளாண்மை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், தனி நபராகவோ அல்லது குழுக்களாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அங்கு விளைபொருள்களை பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். அங்ககச் சான்று பெற விவசாயிகள் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், ஆண்டு பயிர் திட்டம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், துறையுடன் ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தர கணக்கு, எண் ஆதார் அட்டை நகல், மற்றும் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு,தேனீ வளர்ப்பு, வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்பவரும் பதிவு செய்யலாம். கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700, விவசாயிகளுக்கு ரூ.3200, விவசாயிகள் குழுவிற்கு ரூ.7200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், இயற்கை வேளாண்மையில் அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள் குறித்து, ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சக்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Organic Certification Procedures for Natural Farming Farmers ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு