×

கோவையில் 290 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

கோவை, அக். 20: கோவையில் கொரோனா தொற்றினால் நேற்று 290 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 108ஆக உயர்ந்துள்ளது.  கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக தினமும் 300 பேர் முதல் 650க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர். தினமும் 5 முதல் 10 பேர் வரை உயிரிழந்து வந்தனர். இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும் அறிக்கையின்படி, கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும், உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மொத்தம் 290 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 108-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 35 ஆயிரத்து 689 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொேரானா சிகிச்சை மையங்களில் தொடர்ந்து 3 ஆயிரத்து 895 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, கொரோனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி முதல் சிகிச்சைப்பெற்று வந்த 73 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Coimbatore ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...