×

காணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்

பெரம்பூர், அக்.16: கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் - வரலட்சுமி தம்பதியின் மகன் அஜய் (24), சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வேலைக்கு சென்ற அஜய், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஜூலை மாதம் 2ம் தேதி தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் அவரது பாட்டி கோமலவள்ளி புகார் கொடுத்தார்.  ஆனாலும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி, தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் இருந்து கோமலவள்ளியை அழைத்து சில படங்களை காண்பித்து, இது உங்கள் பேரன் தானா, என அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர்.

அந்த புகைப்படங்களில் இருப்பது அஜய் என்பதை கோமலவள்ளி உறுதி செய்தார். இதையடுத்து போலீசார், ‘‘கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி கொரட்டூர் - அம்பத்தூர் இடையே தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் இன்ஜின் மோதி உங்கள் பேரன் அஜய் இறந்துள்ளான். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த அஜய் உடலை, அடையாளம் காண முடியாததால், ஜூலை 9ம் தேதி பெரம்பூர் ரயில்வே போலீசார் மூலக்கொத்தளம் மயானத்தில் அடக்கம் செய்துவிட்டனர்,’’ என தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஸ்டேட் கிரைம் ரெக்கார்ட் பீரோ என்ற காவல்துறையின் அமைப்பு மூலம் காணாமல் போனவர்கள் பட்டியலில் விபத்தில் அடிபட்டு இறந்தவர்கள் பட்டியலை வைத்து சரிபார்த்தபோது, அஜய் இறந்தது தெரியவந்துள்ளது.
அஜய் ரயிலில் அடிபட்டு இறந்த அன்றே, பெரம்பூர் ரயில்வே போலீசார் அஜய் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

ஆனால், தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை.அதுமட்டுமின்றி, ஜூலை மாதம் 23ம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து அஜய் வீட்டிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அஜயின் ஒரிஜினல் சர்டிபிகேட் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவை காவல் நிலையத்தில் உள்ளது. தகுந்த ஆதாரத்தை காட்டி அதை பெற்றுக் கொள்ளுங்கள், என கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய காவலர் ஒருவரை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் காவல் நிலையம் சென்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர். அவை, தண்டவாளத்தில் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த சான்றிதழ்கள் எப்படி தண்டவாளத்தில் கிடந்தன என தலைமை செயலக போலீசார் விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்து இருந்தால், ஒரு மாதத்திலாவது சடலத்தை மீட்டு இருக்கலாம். காணாமல் போனவர்கள் விவகாரத்தில் காவல் துறையினர் மெத்தனமாக செயல்படுவதையே இது உணர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : orphan ,train crash ,
× RELATED தலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத...