×

சிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு

சென்னை, அக்.16:  நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேற்று முன்தினம் மாலை 7.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.05 மணிக்கு வந்தடைந்தது.  முன்னதாக, மாம்பலம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தபோது, சோதனை செய்வதற்கு ரயிலில் ஏறிய ஆர்பிஎப் போலீசாரிடம், எஸ்1 பெட்டியில் பயணம் செய்த ஒருவர், தனது பையை தவறவிட்டு சென்று விட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்பிஎப் போலீசார் அந்த பையை எடுத்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பையை திறந்து பார்த்தபோது, நெக்லஸ், கம்மல், லாங் செயின் என நகைகள் இருந்தன.

அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, நெசப்பாக்கம் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த சுல்தான்சாகர் பானு (49), நெல்லையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பியபோது, பையை தவறவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தவறவிட்ட பையில் நகைகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி அவர் சரிபார்த்தபோது, 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன. அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு நகை பையை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அவர் ஆர்பிஎப் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : passenger ,
× RELATED தென்காசியில் ஏடிஎம்மில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு