×

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்

கடலூர், அக். 2: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் வந்தார். அவர் திடீரென ஆட்சியர் கார் நிறுத்தப்படும் பகுதியில் தனது 2 குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். அருகில் இருந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார் பெண்ணிடம் இருந்த மண்ணெண்ணை கேனை கைப்பற்றினர். புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்கொலைக்கு முயன்ற பெண் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (38), அவரது கணவர் மோகன் அதே பகுதியில் கட்டுமான தொழிலாளராக உள்ளார் என்பது தெரியவந்தது.
   
 ஆனந்தி ஆட்சியர் அலுவலக தரப்பினரிடம் வழங்கிய மனுவில், தனது தந்தை தன்ராஜ், தாய் கண்ணகி. ஒரு சகோதரன், ஒரு சகோதரி உள்ளனர். குடும்பத்துடன் வடலூர் பகுதியில் வசித்து வருவதாகவும், கடந்த 2012ம் ஆண்டு என்எல்சியில் பணிபுரிந்த தந்தை தன்ராஜ் இறப்பிற்கு பிறகு ரிட்டயர்மென்ட் பங்கு தொகையாக அவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தனக்கு கொடுக்க வேண்டிய பங்கு தொகையை கொடுக்காமல் தாய் உள்ளிட்டவர்கள் ஏமாற்றி வருகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட கடலூர் ஆட்சியர் அலுவலக தரப்பினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

Tags : children ,Cuddalore Collectorate ,
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...