×

வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வழிப்பறி கொள்ளையரான தங்கம் வென்ற பாக்ஸர் கைது கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்

திண்டுக்கல், செப். 29: வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வழிப்பறி கும்பலோடு சேர்ந்து கொள்ளையனாக மாறிய தங்கப்பதக்கம் வென்ற பாக்ஸிங் வீரர், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. நிலக்கோட்டை டிஎஸ்பி உத்தரவையடுத்து, சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படையினர் வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். தொடர் தேடுதலுக்கு பிறகு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கதிரேசபிரபு, பாலமுருகன், அரசராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குல்லிசெட்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மைக்ரோ பயாலஜி பட்டதாரி. இவர் நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். தேசிய அளவில் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கொரோனோ தொற்று காரணமாக குல்லிசெட்டிபட்டிக்கு திரும்பிய பாலமுருகன், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்க தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன்கள், ஒன்றரை பவுன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா...