×

நீலகிரி மாவட்டத்தில் கடன் திட்டங்களுக்கு ரூ.3,475 கோடி நிர்ணயம்

ஊட்டி,ஆக.22: நீலகிரி மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3,475 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நடப்பு ஆண்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நமது மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடனுதவிகளும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டிற்கு ரூ.343 கோடி அதிகமாக கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.2475 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டிற்கு ரூ.441 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.559 கோடியும் என மொத்தம் ரூ.3,475 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று தங்களது பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கனரா வங்கி உதவி பொதுமேலாளர் சிவராமன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : district ,Nilgiris ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா...