×

இந்தியாவின் தூய்மை நகரம் பட்டியலில் கோவைக்கு தேசிய அளவில் 40வது இடம்

கோவை, ஆக. 22: இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில்  எவ்வித மாற்றமின்றி கோவை மீண்டும் 40வது இடத்தை தக்கவைத்து கொண்டது.  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், ‘தூய்மை பாரதம்’ இயக்ககம் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த  ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மை நகரங்கள் தொடர்பான பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் பிடித்துள்ளது.  தொடர்ந்து 4-வது முறையாக இந்தூர் நகரம் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2-வது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரமும், 3-வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையும் பிடித்துள்ளது.  இந்த பட்டியலில், கோவை நகரம் 40-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை 42-வது இடத்தையும் ,சென்னை 45வது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக அளவில் கோவை முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய அளவில் கடந்த 2017-ம் ஆண்டு கோவை 16வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு பட்டியலில் 24 இடங்கள் பின்தங்கி 40வது இடத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வருடமும் தூய்மை நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் எவ்வித மாற்றமுமின்றி 40வது இடத்தில் தொடர்கிறது. இது கடந்த ஓராண்டில் தூய்மை பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Coimbatore ,India ,cities ,
× RELATED கோவை வேளாண்மை பல்கலை.யில் இளநிலை...