×

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மூடப்பட்டது

தரங்கம்பாடி, மார்ச் 19: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தமிழக அரசு ஆணைப்படி தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டை வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும், சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஷ் நேவிகேப்டன் ரோலண்டுகிராப் தரங்கம்பாடியையும் அதன் சுற்றுபுறத்தையும் தஞ்சை மன்னரிடம் விலைக்கு வாங்கி கி.பி.1620ல் தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டையையும், அதை சுற்றி மதில் சுவர்களையும் எழுப்பி நுழைவாயிலையும் கட்டினார். அந்த டேனிஷ் கோட்டை தடிமமான சுவர்களால் மிகவும் வலுவாக கட்டப்பட்டது. டேனிஷ் கோட்டை கட்டி முடிக்கபட்டு 50 ஆண்டுகள் டேனிஷ் கிழக்கிந்திய வர்த்தக கம்பெனியின் நிர்வாக மையமாக விளங்கி வந்தது.

கோட்டையின் மேல் தளத்தில் டேனிஷ் ஆளுநர் டேனிஷ் தளபதி வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் தங்கி பணிகளை செய்து வந்தனர். கோட்டையின் கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, கிடங்கு, பீர் மற்றும் ஒயின்அறை, சமையல் பொருளுக்கான அறை, சமையலறை, கோழி வளர்க்கும் அறை, வீரர்கள் தங்கும் அறைகள், உள்ளிட்ட 11 அறைகளும் சிறைச்சாலையும் உள்ளன. மேல் தளத்தில் டேனிஷ் காலத்து கலைப்பொருட்கள், டேனிஷ் கடற்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் டேனிஷ் காலத்து நாயணங்கள் இடம் பெற்றுள்ள அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டேனிஷ் கோட்டையை தினமும் 100க்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின்படி நேற்று முன்தினம் முதல் 31ம் தேதி வரை டேனிஷ் கோட்டை மூடப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : fort ,Danish ,
× RELATED விவசாய மசோதாக்களை எதிர்த்து கோட்டையை...