×

நீர்வள நிலவள திட்டத்தில் உளுந்து விதை பண்ணை அமைப்பு

கடலூர், மார்ச் 19: உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மை திட்டத்தின் கீழ் கடலூர் வட்டாரத்தில் கீழ்பெண்ணையாறு உபவடிநில பகுதிகளில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார துறை) வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண்மை பொறியியல், வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து பல்வேறு திட்டக்கூறுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வேளாண்மைதுறை மூலம் உளுந்து பயிர் சாகுபடி செய்யும் உழவர்கள் பங்குபெறும் விதை கிராமத் திட்ட பயிற்சி கடலூர் வட்டாரம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விதை கிராமத் திட்ட விவசாயிகள் குழுவினர் உளுந்து விதைப் பண்ணை அமைத்து பதிவு செய்துள்ளனர். வம்பன் 6 ரகம் மற்றும் வம்பன் 8 ஆதாரநிலை விதையைக் கொண்டு முன்னோடி விவசாயிகள் ராஜாராம் மற்றும் ரமேஷ் ஆகியோர் விதை பண்ணை அமைத்துள்ளனர். தற்போது 50 நாள் வளர்ச்சியுடைய செடி நன்றாக வளர்ந்துள்ளது. மேலும் இதற்கு தெளிப்பு நீர்பாசனம் அமைத்துள்ளனர். பூக்கும் தருணத்தில் டிஏபி 2 சதவீத கலவை தெளித்துள்ளனர்.  

இதனை கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் ஆய்வு செய்து பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார். மேலும் இக்குழு விவசாயிகளிடம் இருந்து சான்று விதைகளை வேளாண்மை துறை மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுவின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இடுபொருட்களை வாங்குவதற்கு சுழல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் வேளாண்மை அலுவலர்கள் சுஜி, சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் சிவமணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்து ஆய்வு விவரங்களை சேகரித்தனர்.

Tags :
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்