×

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது

பொள்ளாச்சி, மார்ச் 19: பொள்ளாச்சி  நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி  சரஸ்வதி (60). இவர், பழைய இரும்பு மார்க்கெட்டில் உள்ள தனது கணவர் நடத்தி  வரும் கடைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம்  ஆறுமுகம், தனது மகனுடன் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்றார். கடையில்  சரஸ்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு தெரிந்த  நபர்களான ஜோதிநகரை சேர்ந்த செல்வா (27), அரவிந்தன் (27) ஆகிய இருவரும் தனியாக இருந்த சரஸ்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளனர்.  பின்னர் அரவிந்தன் என்பவர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த நகையை  பறித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அங்கிருந்த தப்பியோட முயன்றனர். உடன்  சரஸ்வதி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அந்த பொதுமக்களையும், இருவரும்  கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களை சிலர் பிடிக்க முயன்றபோது,  கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர். சிறிதுநேரத்தில்  அங்கிருந்து இருவரும் தப்பியோடினர். இச்சம்பவத்தால் பழைய இரும்பு  மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் தெரிவித்தார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று, பாலக்காடு ரோட்டில் வாகன  சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக பைக்கில்  வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் சரஸ்வதியிடம்  நகையை பறித்த செல்வா, அரவிந்தன் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்  அவர்களை கைது செய்ததுடன், நகையையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் ஆயுதப்படை எஸ்ஐ-யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது