×

வெலிங்டன் நீர்தேக்க பாசன பகுதி சிறுகுறு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, பிப். 28: பாதிக்கப்பட்ட பருத்தி, சோளம் பயிர் வகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி வெலிங்டன் நீர்தேக்க பாசன பகுதி சிறுகுறு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெலிங்டன் நீர்தேக்க பாசன பகுதி சிறுகுறு விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பாதிப்படைந்த பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நீரை வெலிங்டன் நீர் தேக்கத்துக்கு வந்தடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் சேதமடைந்த பருத்தி, சோளம் பயிர்களை ஏந்தி கொண்டு திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தயா பேரின்பன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பழனிசாமி, பாலமுருகன், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் குருசாமி, கலியன், வீரராஜன், பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து இச்சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்வேலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags : demonstration ,Wellington Irrigation Area Small Farmers Association ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்