×

வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதில் முரண்பாடு லாரி நிறுவனத்தின் வாகனங்கள் சிறைபிடிப்பு

பரமத்திவேலூர், பிப்.28: மத்திய அரசின் வாகன திருத்தச் சட்டத்தின்படி, அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்பு வாங்கும் புதிய லாரிகளில், அந்த நிறுவனமே வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி விற்பனை  செய்து வருகிறது. 2017க்கு பின்பு வாங்கிய லாரிகள், தற்போது எப்சி என்னும் வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும்போது, அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேக கட்டுப்பாட்டு  கருவி, அரசு அனுமதி  சான்று பெறாத நிறுவனத்தின் கருவி எனவும், அரசு சான்றிதழ் பெற்ற நிறுவனத்தில் இருந்து வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி வந்தால் மட்டுமே தகுதிச்சான்று அளிக்க முடியும்  எனவும் கூறி, போக்குவரத்து துறை அலுவலர்கள் திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில், பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், லாரி தயாரிப்பு நிறுவனங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வந்தனர். அந்நிறுவனங்களிலிருந்து முறையான பதில் ஏதும் வராத நிலையில், நேற்று அந்நிறுவனத்திற்கு சொந்தமான 2 வாகனங்களை, பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  இதுகுறித்து பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவரும், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவருமான ராமசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசின் வாகன சட்ட திருத்தத்தின்படி, 2017ம் ஆண்டுக்கு பின்பு வாங்கிய புதிய லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவியை லாரி தயாரிப்பு நிறுவனமே அமைத்துக்  கொடுத்தது. அதற்காக லாரியின் விலையுடன் கூடுதலாக 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை பெற்றனர். தற்போது அந்த லாரிகள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, அந்த குறிப்பிட்ட(பிரிக்கால்) வேக கட்டுப்பாடு கருவிகள் அரசின் அனுமதி பட்டியலில் இல்லை எனவும், அரசு அனுமதித்த கருவியை பொருத்தி வந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் அளிக்க முடியும் என கூறி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். எனவே, தமிழகத்தில்  சுமார் 1.8 லட்சம் லாரிகளுக்கு  வேக கட்டுப்பாடு கருவியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, லாரி தயாரிப்பு நிறுவனங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், கண்டுகொள்ளாத நிலையில் அந்த நிறுவனத்தின் லாரிகளை  சிறை பிடித்து எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். வாகன தயாரிப்பு நிறுவனங்களும், அரசும் பேசி இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தீர்வு காணப்படாத நிலையில், லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Conflict ,
× RELATED கொரோனா தொடர்பான புகார், விளக்கம்...