×

நீலகிரி மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால் குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு

ஊட்டி,பிப்.28: நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மோர், ஜூஸ், நொங்கு மற்றும் குளிர்பானங்களை நாடி பொதுமக்கள் செல்வதால் இவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கோடை காலத்தில் கூட குளிர் வாட்டியெடுக்கும். ஆண்டுக்கு 12 மாதங்களும் பொதுமக்கள் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பி போன்ற வெம்மை ஆடைகளை அணிந்தே வெளியில் வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி காலநிலையில் மாற்றம் ஏற்ட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிவிட்டால், சமவெளிப் பகுதிகளை போன்று வெயில் அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை கடந்த வாரம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் மாலை நேரங்களில் ஓரளவு குளிர் இருந்தாலும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியிலேயே ஒரு சில வீடுகளில் தற்போது பேன் போன்றவைகளை பயன்படுத்த துவங்கவிட்டனர். இது ஒரு புறம் இருக்க ஊட்டியில் மோர் மற்றும் ஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள். காரணம், எப்போதுமே குளிரான காலநிலை இருக்கும் என்பதால், எளிதில் சளி அல்ல காய்ச்சல் தொற்றிக்கொள்ளும். ஆனால்.

தற்போது கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதால் குளிர்பானங்கள், பழரசம், இளநீர், நொங்கு மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தற்போது மோர் மற்றும் குளிர்பானங்கள் அதிகளவு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர். அதேபோல், பழரசம் மற்றும் இளநீர் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாலையோரங்களில் நொங்கு, தர்பூசணி போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள்  கூறுகையில், தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் டீ மற்றும் காப்பி போன்றவைகளை குடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதே சமயம் மோர், ஐஸ் கிரீம், தயிர் வடை மற்றும் புரூட் ஜூஸ் போன்றவைகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். நாங்களும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பகல் நேரங்களில் ஜூஸ், மோர், தயிர் வடை போன்ற குளிர்ச்சியான உணவு பொருட்கள் மற்றும் பானங்களை தரமாக தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது இவைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் அதிகரிக்க, அதிகரிக்க இது போன்ற பொருட்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும், என்றனர்.

Tags : district ,Nilgiris ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்