×

ஆதிவாசி மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்திய தனியார் தோட்ட நிர்வாகம்

பந்தலூர்,பிப்.28: பந்தலூர் அருகே சேரம்பாடி கண்ணம்பள்ளி ஆதிவாசி காலனியில் ஏழு ஆதிவாசி குடும்பங்கள் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மிகவும் மோசமான குடிசை வீடுகள் என்பதால் மழை காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு குடியிருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் காட்டு யானைகள் தினமும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியினுள் புகுந்து  குடிசைகளை உடைத்து சேதம் செய்து வந்தது. சில நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் ஆதிவாசி மக்கள் அருகே இருக்கும்  சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில்  ஆதிவாசி மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சிர்பில் ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைக்கு பிறகு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி கூடலூர் ஊராட்சி ஒன்றியம்  சார்பில் 7 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி ஒப்பந்ததாரர் மூலம்  மூன்று வீடுகள் கட்டுவதற்கு தரைதளம்  அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள  தனியார் தோட்ட நிர்வாகத்திடம்  அனுமதி வாங்காமல்  தொகுப்பு வீடுகள் கட்டப்படுகிறது என தனியார் தோட்ட நிர்வாகம் தடை விதித்ததால் வீடுகட்டும் பணி தடைப்பட்டுள்ளதாக ஆதிவாசி மக்கள் தெரிவித்தனர். இதனால் வீடு கட்டும் பணி கிடப்பில் உள்ளதால் ஆதிவாசி மக்களின் சொந்த வீடு கனவு சிதைந்துள்ளதாக தெரிகிறது.  எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு செய்து  தனியார் தோட்ட நிர்வாகத்தின்  அனுமதி பெற்று மீண்டும் வீடுகட்டும் பணியை துவங்கிட வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு