×

பணப்பலன் வழங்க கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்தோடு உண்ணாவிரதம்

நாகை,பிப்.28: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவியாளர் தனக்கு வரவேண்டிய ரூ. 2 லட்சத்தை வழங்க கோரி நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ராசாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருணன்(60). இவர் நேற்று தனது மனைவி தனலட்சுமி, சகோதரர் அந்தணன் மற்றும் உறவினர்களுடன் நாகை கலெக்டர் அலுவலகம் வந்தார். அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து தீர்வு கிடைக்கும் வரை குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். மேலும் தனது கோரிக்கைகளை பிளக்ஸ் பேனரில் அடித்து உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு பின்னால் வைத்தார்.திடீரென குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இதன்பின்னர் அருணனை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நாகை மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினேன். கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றேன். எனக்கு ஈட்டிய விடுப்பு தொகை ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரவேண்டும். பணி ஓய்வு பெற்ற 2 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. எனக்கு வரவேண்டிய தொகையை வழங்க கோரி பல முறை உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 14ம் தேதி எனது கோரிக்கை அடங்கிய மனுவை நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்தேன். அதற்கும் உரிய பதில் கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு உழைத்து தொகையை தர மறுப்பது ஏன்? எனக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்று தர வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் தான் உள்ளது.ஆனால் அதிகாரிகள் என்னை வங்கிக்கு சென்று பார்த்து வரும்படி கூறுகிறார்கள். நான் வங்கிக்கு சென்றால் வங்கி அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை. எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தர வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருக்கும் போது, நான் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது ஏன்? எனவே எனக்கு வரவேண்டிய தொகையை உடனே பெற்றுத்தர வேண்டும் என்றார். இதை கேட்ட போலீசார் அவரை கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அருணன் தனது குடும்பத்தினரோடு சென்றார்.

Tags : servants ,
× RELATED ட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்!