×

பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை காற்றில் பறந்தது கலெக்டரின் உத்தரவு காரைக்குடியில் திண்டாடும் பயணிகள்

காரைக்குடி, பிப்.27: கலெக்டர் உத்தரவிட்டும் காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ யூனிட் சீரமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் புதிய பஸ் ஸ்டாண்டு உள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ராமேஸ்வரம் உள்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் என 250க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு ஆன்மீக தளங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சுற்றுலா தளங்கள், ஆன்மீக தளங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் நடக்கும் கருத்தரங்குகள், மாணவர் சேர்க்கை விவரங்கள் அறிய என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகளின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. நுழைவு வாயிலில் ஆண்களுக்கான கழிப்பறையில் இருந்து கடும் துர்நாற்றம் வருவதால் உள்ளே நுழையும் போதே மூக்கை பிடித்துக்கொண்டு தான் வரவேண்டும்.

மதுரை, திருச்சி பஸ் நிற்கும் இடம் மற்றும் தேவகோட்டை, சிவகங்கை பஸ் நிற்கும் இடங்களில் உள்ள நடைமேடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் யூனிட் அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆர்.ஓ யூனிட்டில் தண்ணீர் வராமல் வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டு பகுதியை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மக்களின் புகாரை தொடர்ந்து ஆர்.ஓ யூனிட்டை சரி செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

Tags : bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை