×

கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, பிப். 26: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 60 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 25 அடிக்கு கீழேயே நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து செல்லும் பிரதான கால்வாய் வழியாக ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. தற்போது அணை நீர்மட்டம் சரிவடைந்து உள்ளதால், குடிநீருக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து செல்லும் 67 கி.மீ. தொலைவில் உள்ள பிரதான கால்வாய் புதர்மண்டி செடி, கொடிகள் வளர்ந்து ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. கோடை காலங்களில் பிரதான கால்வாயை பொதுப்பணித்துறையினர் தூர் வாருவது வழக்கம். மேற்படி கால்வாயை தூர்வாரினால் கடைமடை வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் பிரதான கால்வாயில் பல்வேறு பகுதிகளில் கரையோரங்களில் மண்சரிவு, கால்வாய்க்குள் செடி, கொடி வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் காலத்தில் கால்வாயில் உள்ள செடி, கொடிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மதகுகளை அடைத்து தண்ணீர் விரயமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பாசன கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்றுவதோடு ஆங்காங்கே கிடக்கும் கற்களை வெளியேற்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பி.எம்.சி கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...