×

ஜல்லி கற்கள் நீட்டிக்கொண்டு கிடக்கின்றன பாதியில் நிற்கும் சாலை பராமரிப்பு பணி வாகன ஓட்டிகள் அவதி

சாயல்குடி, பிப்.26: முதுகுளத்தூரிலிருந்து கமுதி செல்லும் சாலையில் பராமரிப்பு பணிக்காக போடப்பட்டுள்ள கூர்மையான கற்களால் வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.
முதுகுளத்தூரிலிருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டை, மதுரை செல்லும் சாலை உள்ளது, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கமுதி சாலையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் சேதமடைந்த இடத்தில் இருந்த பழைய தார்ச்சாலையை குறைந்த அளவில் அகற்றிவிட்டு, புதிய தார்ச்சாலை போட திட்டமிடப்பட்டது. இதனால் இச்சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பழைய சாலையில் ஒட்டுபோடும் பணிக்காக பழைய சாலை அகற்றப்பட்டு, அதில் ஜல்லிகற்கள், கிரசர் தூசு கலவை கலந்த மெக்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மெக்டம் அமைக்கப்பட்டு பல வாரங்கள் கடந்தும் தார்ச்சாலை அமைக்காததால், வாகனங்கள் செல்ல, செல்ல ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறி கிடக்கிறது. கிரசர் தூசும் பறந்து வருகிறது. கூர்மையான ஜல்லி கற்களால் வாகனங்களின் டயர்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வரும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருப்பதாக கூறுகின்றனர்.மேலும் எம்.தூரி அருகே உள்ள அரசு மாணவர் விடுதி மாணவர்கள் பள்ளிக்கு வந்து, செல்லும்போது கால்களை பதம் பார்ப்பதாக கூறுகின்றனர். இதனைபோன்று சாலையின் இருபுறமும் சிறிய கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களின் பக்கவாட்டுகளில் கோடுகளை கிழித்து வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது. ஊர் பலகை, முன் எச்சரிக்கை பலகை போன்றவற்றையும் மறைத்து, கருவேல மரம் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வளைவுகளில் எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே முதுகுளத்தூர்-கமுதி சாலையில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கருவேலமரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு