×

ஆள் பற்றாக்குறையால் காலம் முடிந்தும் நடக்காத நெல் அறுவடை வீணாகும் நெல் மணிகள் * விவசாயிகள் கவலை

காரைக்குடி, பிப்.20: ஆள், அறுவடை இயந்திரம் பற்றாக்குறையால் காலம் முடிந்தும் அறுவடை செய்யாததால் நெல் மணிகள் வயலில் விழுந்து வீணாகி ஏக்கருக்கு 5 மூடை வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 65 ஆயிரம் எக்டேருக்கு மேல் விவசாயபணிகள் நடக்கிறது. காரைக்குடி தாலுக்காவை பொறுத்தவரை கல்லல் ஒன்றியத்தில் 5000 எக்டேருக்கு மேலும், சாக்கோட்டை ஒன்றிய பகுதியில் 5000 எக்டேருக்கு மேலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மழை ஓரளவு கை கொடுத்ததால் நெல் பயிரிடப்பட்டுள்ளது. டீலக்ஸ் பொன்னி, கல்சர் பொன்னி ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பருவமழையை நம்பியே இப்பகுதியில் விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. நெல்லை பொறுத்தவரை ரகத்துக்கு ஏற்றார் போல் 130 முதல் 135 நாளில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் இயந்திரத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த இயந்திரத்தை பொறுத்தவரை மாவட்டத்திற்கு அதாவது 65 ஆயிரம் எக்டேருக்கே ஒன்றே ஒன்றுதான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தனியார் இயந்திரத்தை நம்பியே காத்திருக்கின்றனர். அவர்களும் பெரிய விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்று விடுகின்றனர். சிறிய அளவில் 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு உடனே வருவது கிடையாது. இதனால் அறுவடை காலம் முடிந்தும் 160 நாட்களுக்கு மேலாக நெல் அறுவடை செய்யப்படாமல் உள்ளதால், நெல் மணிகள் வயலில் விழுந்து வீணாகி வருகிறது. தவிர அதிக நாட்களுக்கு பிறகு அறுப்பதால் நெல் கலர் மாறி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடைக்கு ஆட்களும் கிடைக்காமல், இயந்திரமும் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி விஜயன் கூறுகையில், ஆள் பற்றாக்குறை, இயந்திரம் கிடைக்காததால் அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 160 நாட்களுக்கு மேல் ஆனதால் நெல் மணிகள் வயலில் விழுந்து விட்டது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூடை கிடைத்து வந்த நிலையில், அறுவடை நாளுக்கு பிறகு அறுத்ததால் ஏக்கருக்கு 5 மூடை அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தவிர நெலின் நிறமும் மாறி உள்ளதால் விலை போகாது. தவிர வைக்கோலும் உடைந்து முழுதாக கிடைக்காது. சாதாரணமாக ஆள்வைத்து அறுப்பதை விட, இயந்திரம் மூலம் அறுப்பதன் மூலம் ஏக்கருக்கு ரூ.3000 வரை மிச்சப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு உழவு, உரம், பூச்சி மருந்து, நடவு, அறுவடை கூலி என ரூ.20 ஆயிரம் செலவாகும். தற்போது உள்ள நிலையில் ஏக்கருக்கு 6000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டுக்கு நெல்லும், மாட்டுக்கு வைக்கோலுக்காகவும் தான் விவசாயம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. லாபத்திற்கு வழியில்லை. இதனை போக்க ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நெல் விவசாயத்தை கணக்கிட்டு 2 முதல் 3 இயந்திரங்களை சம்மந்தப்பட்ட துறையினர் அறுவடை காலத்திற்கு முன்பே கொண்டு நிறுத்த வேண்டும். பெரிய, சிறிய விவசாயி என பாகுபாடு பார்க்க கூடாது. குறிப்பாக மிஷின் நல்ல கன்டிசனில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

Tags : Rice Harvesting Rice Bells ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...