×

புன்னப்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் 160 கொத்தடிமைகள் மீட்பு

ஊத்துக்கோட்டை, பிப். 19: பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 160 பேர் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலி டாக்டர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம்  கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சேம்பரில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான சரஸ்வதி  தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன்,  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஊத்துக்கோட்டை எஸ்.ஐ. ராக்கி குமாரி மற்றும் போலீசார் நேற்று மாலை திடீரென புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள   செங்கல் சேம்பரில் சோதனை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள்,  சிறுவர்,  சிறுமிகள் என 160 பேரை மீட்டனர்.

இதில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் எத்தனை மாதங்களாக  சேம்பரில் வேலை செய்கிறார்கள்? என விசாரணைக்காக 3 லாரிகளில்  திருவள்ளூர் அழைத்து சென்றனர்.இந்த செங்கல் சேம்பரில் மீட்கப்பட்ட ஒடிசா மாநில கொத்தடிமைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த பிரேமானந்த் (40) என்பவர் டாக்டராக செயல்பட்டு வந்துள்ளார்.  போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவருக்கு உதவியாளராக இருந்த விக்ரம் (35)  என்பவரையும்  கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சேம்பரில் ஒடிசா கொத்தடிமைகளாக பணியாற்றியவர்களுக்கு சிகிச்சையளிக்க வைத்திருந்த  மருந்து, மாத்திரைகள், ஊசி, குளுக்கோஸ் பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதை இவர்களுக்கு சப்ளை செய்தது யார்? என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் புன்னப்பாக்கம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : village ,Punnappakkam ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...