×

ஆவடி அருகே சொத்து தகராறில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

ஆவடி, பிப். 19: ஆவடி அருகே கோயில்பதாகை பகுதியில் சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ டிரைவரை அடித்து கொன்று சாலையில் சடலத்தை வீசி சென்றனர். இதுதொடர்பாக  உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த கோயில்பதாகை, பூம்பொழில் நகர், பூங்கா தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சௌந்தர்யா (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ராஜேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிக்கொண்டே வீட்டை விட்டு சென்ற ராஜேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டு அருகே உள்ள இறைச்சிக்கடை பகுதியில் சாலையோரம் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ராஜேஷ் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவரது சடலத்தை சாலையில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:ராஜேஷுக்கு, நாகராணி என்ற அம்மா  மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர். கடந்த வாரம் ராஜேஷ், நாகராணியிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நாகராணி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது புகார் கொடுத்து உள்ளார். போலீசார் ராஜேஷை வரவழைத்து கண்டித்து அனுப்பி உள்ளனர்.இதற்கிடையில் நாகராணியிடம், அவரது சகோதரர் ஒருவரும் சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்துள்ளார். இதனால் ராஜேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் மீது உறவினர் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அடித்து, கொன்றிருக்கலாம். கொலை தொடர்பாக ராஜேஷின் உறவினர்கள் இருவரையும் தேடி வருகிறோம். அவர்களை பிடித்த பிறகு தான் ராஜேஷ் கொலை தொடர்பான தகவல் தெரிய வரும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Auto driver ,Avadi ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!