×

சிறுகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு புதிய வாய்க்கால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி, பிப். 17: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாயில் இருந்து வீணாகும் உபரி நீருக்கு புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளத்தில் இருந்து வரும் வராகநதி வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் வழியாக சென்று, வைகை ஆற்றில் கலக்கிறது. இதில் வடுகபட்டி வராகநதியில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. பருவமழை காலங்களில் வாய்க்காலில் வரும் தண்ணீர் சிறுகுளம் கண்மாய் நிரம்பியவுடன் உபரிநீராக தெற்கு நோக்கி சென்று ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலில் சென்று கலக்கிறது.

வேட்டுவன்குளம் கண்மாய் நிரம்பி, பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், குள்ளப்புரம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வீணாக வைகை ஆற்றில் கலக்கிறது. பருவமழை காலங்களில் சிறுகுளம் கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீருக்கு புதிய வாய்க்கால் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். சிறுகுளம் கண்மாயில் இருந்து கிழக்கு நோக்கி சில்வார்பட்டி தெற்குவெளி மற்றும் மந்தைவெளி, கிழக்கு வெளி பகுதிக்கு புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த மூன்று பகுதிகளில் அதிகளவில் விவசாய கிணறு மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக போதிய பருவமழை பெய்யாததால் இந்த பகுதிகளில் விவசாயம் நடைபெறவில்லை. தொடர்ந்து வறட்சியை சந்தித்துவந்த இந்த பகுதியில் தற்போது விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாரி வருகிறது.

இந்த புதிய வாய்க்கால் மூலம் மழை காலங்களில் வீணாக செல்லும் நீரை அனுப்பினால் சுமார் 250ஏக்கரில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் உயரும். அப்படி நிலத்தடி நீர் உயர்ந்தால் விவசாயிகள் ஒருபோக சாகுபடியினை செய்யமுடியும். ஆகையால் அதிகாரிகள் சிறுகுளம் கண்மாயில் இருந்து தெற்குவெளி, மந்தைவெளி, கிழக்குவெளி ஆகிய பகுதிகளுக்கு புதிய வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது