×

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு புதுகை விவசாயிகள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, பிப்.17: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவுத்திட்டம் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டமாகும். வரலாற்று சிறப்பு மிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7 ஆயிரத்து 677 கோடி ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளது.மேலும் இத்திட்டத்தால் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் வினாடிக்கு 6 ஆயிரத்து 360 கன அடி வீதம் கொண்டு வரப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறுவதுடன் 20 ஆயிரத்து 249.26 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதி இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இத்திட்டத்தால் தற்போது உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் எதிர்கால தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் அமைந்து உள்ளதால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்ற காலை இறைவணக்க கூட்டத்தின் போது தினசரி நாளிதழ்களில் வரபெற்ற செய்தியினை வாசித்து இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மாணவ, மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags : Cauvery ,Vaigai ,Guntaru ,Tamil Nadu ,
× RELATED கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட...