×

பொன்விழா ஆண்டிற்கு வசூல் செய்ய நிர்பந்தம் பேராசிரியர்கள் விடிய விடிய போராட்டம் இளையான்குடி கல்லூரியில் பரபரப்பு

இளையான்குடி, பிப்.13: இளையான்குடி கல்லூரியில் பொன்விழா ஆண்டிற்கு வசூல் செய்ய மறுத்த இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பேராசிரியர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையான்குடியில் தனியார் கலை அறிவியில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக கல்லூரி நிர்வாகம் டொனேசன் வாங்க வேண்டும் என பேராசிரியர்களிடம் கடந்த வாரம் முதல் நிர்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்லூரி இணை இயக்குனர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட பேராசிரியர் கமல்ராஜ், அபுபக்கர் சித்திக் அகிய இரண்டு பேராசிரியர்களை நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்தது. இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற பேராசிரியர்களின் போராட்டம் இளையான்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் அபுபக்கர் சித்திக், கமல்ராஜ் கூறுகையில், கடந்த ஒரு மாதகாலமாக ஊதியம் தரவில்லை. பொன் விழா ஆண்டு விழாவிற்காக வசூல் செய்ய ரசீது புக் கொடுத்தனர். அதற்கு மறுப்பு கூறியதால் பேராசிரியர்கள் தலா ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை தர வேண்டும் என நிர்பந்தம் செய்தனர். இதை எதிர்த்ததால் விதி மீறியதாக எங்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். அரசு தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றனர். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி கூறுகையில், எந்த குறை இருந்தாலும் எங்களிடம் சொல்லியிருக்கலாம், மேலிட அதிகாரிகளிடம் கூறியது தவறானது. கல்லூரி விதியை மீறியதற்காகவும், கல்லூரி நிர்வாகத்தின் பேரிலும் இரண்டு பேராசிரியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

Tags : professors ,Illangudi College ,Golden Jubilee Year ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...