×

தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் பெண் ஆம்புலன்சில் வந்து மனு அளித்ததால் பரபரப்பு

கரூர், ஜன. 28: தவறான சிகிச்சையால் உயிருக்குபோராடும் பெண் ஆம்புலன்சில் வந்து கோரிக்கை மனு அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஹைருன்ஆப்ரின் என்ற பள்ளபட்டியைசேர்ந்த பெண் உறவினர்களுடன் நேற்று ஆம்புலன்சில் வந்தார். ஸ்ட்ரெச்சரில் அவரை இறக்கினர். பின்னர் சக்கர நாற்காலி கொடுக்கப்பட்டது. அதில் சென்று கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்கும் பள்ளபட்டி ஷாநகர் ஷேக்பெரோஜ் என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இங்கு தனியார் பெண் டாக்டரிடம் 2018ல் கருவுற்றபோது சிகிச்சைபெற்றேன், பிரசவத்திற்கும் அவர்களிடமே சென்றேன். கரூரில் உள்ள ஒருமருத்துவமனையில் வைத்து அவர்களே பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறுநீரில் நிறம் மாற்றம் ஏற்பட்டது. சரியாகி விடும் என அனுப்பினர். மற்றொரு டாக்டரிடம் சென்றபோது மாவட்ட தலைநகரிலேயே இதற்கு சிகிச்சைபெற முடியும் என்றனர். பின்னர் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு ஏற்கனவே நடந்த சிகிக்சையில் கவனக்குறைவினாலும், அலட்சிய போக்கினாலும் மலக்குடலையும்சேர்த்து கிழித்துவிட்டதால் பிரச்னையை சரி செய்ய ரூ.70 ஆயிரம் பணம்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தூக்கி கொண்டு போங்கள் எனவும் கூறினர்.

நகைகளை விற்று ரூ.1லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை முடிந்து ஊருக்கு வந்தோம். ஏற்கனவே அறுவை சிகிச்சைசெய்த டாக்டரிடம் கூறியபோது, அவர் தனது தவறான சிகிச்சை காரணமாக இந்நிலை ஏற்பட்டதால், மருத்துவ செலவு முழுவதையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் பணம் தர மறுத்ததுடன் மிரட்டல் விடுத்தார். மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவானதை 6 மாதம் ஆகியும் தரவில்லை. நான் பிளாஸ்டிக் பையுடன் வலி வேதனையுடன் வாழ்ந்து வருகிறேன். எனது வாழ்க்கையை நாசப்படுத்தி பொருளாதார இழப்பிற்கு காரணமான பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கீழே விழுந்த முதியவர்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மலையப்பன்(70) என்வர் கோரிக்கை மனு அளிக்க வந்தார். கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்துவிட்டு திடீரென கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர். கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவர் அளித்த மனுவில், தோரணக்கல்பட்டி செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகுதியில் வசிக்கிறேன். எனது மகனும் மருமகளும் வீட்டில் நானும் எனது மனையும் இல்லாத சமயத்தில் 6 பவுன் செயின், ரூ, 2 லட்சம் பணத்தை எடுத்து சென்று விட்டனர். அவர்கள் போவதற்கு முன்னால் வீட்டுப்பத்திரத்தை அடகு வைத்து ராயனூரில் ஒரு பைனான்சியரி–்டம் ரூ.2.50 லட்சம் வாங்கியுள்ளனர். வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் வந்து விட்டது. நாங்கள் சாப்பாட்டிற்கே வழியின்றி கஷ்டசூழலில் இருக்கிறோம். அவர்களை கண்டுபிடித்து எங்களுக்கு வர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

முதியவர் தர்ணா போராட்டம்
ஏமூர் கிராமம் குன்னனூர் கருப்பண்ணன் என்பவர் அளித்த மனுவில், ஏமூர் கிராமத்தில் புன்செய் நிலங்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டு என்னைப்போன்ற மூத்த குடிமக்களை வீட்டையும், சொத்தையும் விட்டு வெளியேற வேண்டும் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்களை அனாதை ஆக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார். இது பற்றி அவரிடம் கேட்டபோது தனது மகனே நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார். இதனால் மனம் உடைந்து 2019 ஜூன் மாதம் தனது மனைவி இறந்து விட்டதாகவும், அதற்கும் வரவில்லை.
பிறர் உதவியோடு ஈமக்கிரியைகளை செய்ததாகவும் கூறிய கருப்பண்ணன் கண்ணீர் வடித்தபடியே சென்றார்.

ஆத்தூர் பூலாம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை மனு
ஒருவர் சுகாதாரகேடு ஏற்படுத்துகின்ற வகையில் கழிவுநீர் குழாய் அமைத்துள்ளார். இதனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு காய்ச்சலுடன் வாழ்ந்து வருகிறோம்.

Tags :
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...