×

உணவுத்துறை அதிகாரிகள் 165 கடைகளில் ஆய்வு

கோவை, ஜன. 28:  தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை கமிஷனர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், உணவு கடைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, காந்திபுரம் பகுதியில் 13 கடைகள், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 17 கடைகள், சிங்காநல்லூர் பகுதியில் 42 கடைகள், சூலூர், நீலாம்பூர், தென்னம்பாளையம் பகுதிகளில் 40 கடைகள் என மொத்தம் 165 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், 50 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சுமார் 34.89 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.66 ஆயிரம். மேலும், முதல் முறை குற்றத்திற்கான அபராத தொகையாக மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது: உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும். தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் முதல்முறை குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்பட்ட அனைவரும் அபராத தொகையை செலுத்தியுள்ளனர். சம்மந்தப்பட்ட கடை 2வது முறை குற்றச்செயலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரமும், 3வது முறை ஈடுபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் சம்மந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும். மேலும், பொதுமக்கள் கலப்படம், கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய்கள், தரமற்ற உணவு உள்ளிட்டவை தொடர்பாக உணவுத்துறையின் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Food department officials ,stores ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...