×

எண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலையில் மின் விளக்குகள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எண்ணூர் விரைவு சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி, மாநகர பேருந்து, கார், பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலையில் பல  இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

எனவே, இச்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் இந்த சாலையில் சூரிய நாரயண சாலை முதல் ராமகிருஷ்ணா நகர் வரை ரூ.2.72 கோடி மதிப்பீட்டில் 363 புதிய மின்கம்பங்களுடன் கூடிய  726 மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.  இதற்கான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் இந்த மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், மின் விளக்குகள் அமைக்க எண்ணூர் விரைவு சாலையின் குறுக்கே ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு மின் வயர்கள் பதிக்கப்பட்டன. ஆனால், பணி முடிந்து, மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதங்களுக்கு  மேலாகியும் இதுவரை, சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.  சில இடங்களில் கான்கிரீட் கொண்டு இந்த பள்ளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால், கனரக வாகனங்கள் செல்வதால்,  கான்கிரீட் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accident drivers ,road ,Nunnur ,
× RELATED திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா