×

பள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  புதுவண்ணாரப்பேட்டை, வஉசி நகர், சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (40). லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக மகேந்திரன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவி  ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபோல் நேற்று முன்தினமும் அந்த மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் சென்று மகேந்திரனை மடக்கி பிடித்து தர்மஅடி  கொடுத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்து மகேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED கல்லணை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது