திருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை மிரட்டல்: 2வது கணவர் மீது புகார்

அண்ணாநகர்: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் 2வது கணவரை கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் துணை நடிகை பரபரப்பு புகாரளித்துள்ளார். அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சமிக்‌சா (39). சினிமாவில் துணை நடிகை. இவர்,  தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், ஷெனாய் நகரில் சொந்தமாக பியூட்டி பார்லர் மற்றும் யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு  சரவணன் சுப்பிரமணி (42) என்பவருடன் சமிக்சாவுக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதை நம்பி, சரவணன் சுப்பிரமணியை சமிக்சா 2வது திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கடந்த சில  ஆண்டுகளாக சமிக்சாவின் நகைகள், பணம், சொத்துகளை சரவணன் சுப்பிரமணி சிறுக, சிறுக பெற்று வந்ததாகவும், அவர் எந்த தொழிலையும் செய்யாமல் ஊதாரியாக சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்கிற மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், மற்றொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் சமிக்சாவுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சமிக்சா ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘என்னையும் எனது 2 மகன்களையும் கொன்றுவிடுவதாக சரவணன் சுப்பிரமணி, அவரது மனைவி ஆர்த்தி மற்றும் அவர்களுடைய நண்பர் திண்டுக்கல் சரவணன்  ஆகியோர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். புகாரின்பேரில் துணை ஆணையர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து துணை நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த  சரவணன் சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேர் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Murder ,Deputy Actress ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்