×

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் குறுகிய பாலத்தில் சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் தவிப்பு

திருவள்ளூர், ஜன. 24: திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ஊராட்சியில், 4 அடி அகலம் கொண்ட பாலம் வழியாக, சுடுகாட்டுக்கு சடலங்களை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பாலம் அருகே அகலமான பாலம்  கட்ட வேண்டும் என ஊராட்சி தலைவி தலைமையில் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் செவ்வாப்பேட்டை ஊராட்சி தலைவி டெய்சிராணி  அன்பு கொடுத்த மனுவின் விபரம்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டு, செவ்வாப்பேட்டை, பழைய காலனி, புது காலனி, எப்சிஐ காலனி, கேஜெஜெ நகர், செல்லியம்மன் நகர், செந்தில் நகர், குறிஞ்சி நகர், கங்கா நகர்  விரிவு, மதி நகர் ஆகியவை உள்ளன.இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இந்த ஊராட்சியில் இறப்பு நேர்ந்தால்,  கிருஷ்ணா கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள 4 அடி அகலமே கொண்ட சிறு பாலத்தின் மீதுதான் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லவேண்டிய அவலநிலை உள்ளது.

இந்த குறுகிய பாலத்துக்கு தடுப்பு சுவரும் இல்லை. இதை அகலப்படுத்தாததால், 2 கி.மீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் சடலத்தை எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, சிறுபாலம் அருகே மற்றொரு அகலமான பாலம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது,துணைத்தலைவர் சசிகலா  கோபிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், ஒன்றிய கவுன்சிலர் வேதவல்லி சசிகுமார், வார்டு உறுப்பினர்கள் கே.எம்.வி.ஆனந்த், ஆரோக்கியமேரி, வனஜா மகேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்புஆல்பர்ட்  ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : bridge ,Cherawapattai Panarachchi ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!