×

பழநி அருகே நெற்பயிர்களை காலி பண்ணும் காட்டுப்பன்றிகள்

பழநி, ஜன. 23: பழநி அருகே பாலசமுத்திரம் பகுதியில் நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் சப்கலெக்டரிடம் மனு அளித்தனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களில் கடந்த மாதம் பெய்த பருவமழையால் நெற்பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்குள்ள விவசாய பகுதிகளில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதாகக் கூறி நேற்று பாலசமுத்திரம் எஸ்டேட் விவசாயிகள் சங்கத்தினர் சப்கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அம்மனுவில், பழநி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள ரெங்கசாமி பாதம், ரெங்கசாமி கரடு, செக்காடும்பாறை மற்றும் யானைப்பாறை பகுதிகளில் நெற்பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்பட்டுள்ளன. சுமார் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் விளையும் தருவாயிலும், பால்பிடிப்பு நிலையிலும் உள்ளன. இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் காட்டுப்பன்றி கூட்டம் இரவு நேரங்களில் வயல் பரப்பிற்குள் புகுந்து நெற்பயிர்களை கடித்து நாசம் செய்கின்றன. விரட்ட செல்லும் விவசாயிகளையும் தாக்கி விடுகின்றன. இப்பகுதியில் சிறிய அளவிலான குத்தகை விவசாயிகளே அதிகளவு உள்ளனர். காட்டுபன்றிகள் சேதப்படுத்துவதால் 1 போகம் மட்டுமே நடைபெறும் நெற்பயிர் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : paddy fields ,Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்