×

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி வீட்டுக்கு தீவைப்பு

ஆவடி, ஜன.22: ஆவடி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த பொத்தூர், ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கீதா (31). பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பிரேம்நாத். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரேம்நாத் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீதாவிற்கும், தூத்துக்குடியை சார்ந்த செய்யது காதர் செரிப் (36) என்ற வியாபாரிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என கீதாவிடம் கூறியுள்ளார். இதன்பிறகு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், செய்யது காதர் செரிப்,  கீதாவை அழைத்து கொண்டு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று உள்ளார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பது கீதாவிற்கு தெரியவந்தது இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த கீதா, அவரிடம் தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். பின்னர், அவர் சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்யது காதர் செரிப் சென்னை வந்துள்ளார். அப்போது, அவர் கீதாவை சந்தித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் வர மறுத்து பெற்றோர் வீட்டிலேயே இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் ஆவடி அருகே பொத்தூரில் உள்ள கீதா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர், பூட்டிய இருந்த வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். இதில், வீடு முழுவதும் தீ பரவி எரிந்துள்ளது. தகவல் அறிந்ததும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும், வீட்டுக்கு தீ வைத்ததில் செய்யது காதர் செரிப்பும் காயமடைந்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பி ஓடி அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து கீதா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது காதர் செரிப்பை தேடி வருகின்றனர். குடும்பம் நடத்த வராததால் மனைவியின் வீட்டை தீ வைத்து எரித்து நாசமாக்கிய சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு