×

டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது

தஞ்சை, ஜன. 22: டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது: கடந்தாண்டு கஜா புயல் பாதிப்பு, அதற்கு முந்தைய ஆண்டு வறட்சி என்கிற நிலையில் இந்தாண்டு டெல்டாவில் நெல் சாகுபடி உரிய காலத்தில் நடந்த நிலையில் இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்நிலையில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சமீபத்தில் பெய்த திடீர் மழையால் நெல்மணிகள் வயலில் புதைந்து பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்கவும், விவசாயிகள் பாதிக்காத வண்ணம் பயிர் காப்பீடு தொகை கிடைக்கவும், தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யவும் உரிய தலையீடுகளை டெல்டா மாவட்ட அமைச்சர்கள் செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்றும், பொதுமக்கள் கருப்பு கருத்து கேட்பு அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்கள் கருத்து கேட்பு அவசியம் என்றும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஆவண செய்ய மாவட்ட அமைச்சர்களை கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Delta ,
× RELATED டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து