எண்ணூர் குடியிருப்பு பகுதியில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயால் விபத்து: சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டு எண்ணூர் வள்ளுவர் நகரில் உள்ள 7 தெருக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் கீழ்நிலை கழிவுநீர் தேக்கத்தொட்டி அமைத்து அதில் கழிவுநீரை தேக்கி, நிரம்பியதும் பின்னர் தனியார் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நீரை அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். மழைநீர் கால்வாயை மாநகராட்சி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியது. நாள் கணக்கில் மழைநீர் தேங்கி இருந்ததால் சேறும் சகதிமாகி துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மழைநீர்  கால்வாய் மீது போடப்பட்டிருந்த ஸ்லாப்  உடைக்கப்பட்டு அதில் இருந்து சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனாலும் இந்த பணியை முழுமையாக செய்யாமல் பாதியில் கிடப்பில் விட்டுவிட்டதால் பல இடங்களில் மழைநீர் கால்வாய்கள் திறந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியோர்கள் நடந்து வரும்போது கால் இடறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரும் சிரமப்படுவதோடு பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே வள்ளுவர் நகரில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : canal accident ,area ,Ennore ,
× RELATED எண்ணூர் குடியிருப்பு பகுதியில்...