×

விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் ஒரே ஆண்டில் ₹30 லட்சம் வரி, அபராதம் வசூல்

u 6,167 லைசென்ஸ் ரத்து
u வட்டார போக்குவரத்து துறை தகவல்

திருவள்ளூர், ஜன. 21:  திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிக்குமார், காவேரி ஆகியோர் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முடிய 12 மாதங்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிக பாரம், அதிக பயணிகளை ஏற்றுதல், படிக்கட்டில் பயணம் செய்தது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டியது மற்றும் வரி செலுத்தாதவர்கள், எப்.சி., ஆய்வு முடிக்காமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது 1,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆய்வின்போது அபராத தொகையாக ₹22 லட்சத்து 89 ஆயிரத்து 780 விதிக்கப்பட்டு, ₹10 லட்சத்து 26 ஆயிரத்து 610 வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ், லாரிகள், உள்பட பல்வேறு வாகனங்களில் இருந்து ₹19 லட்சத்து 70 ஆயிரத்து 709 வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வரி மற்றும் அபராதம் சேர்த்து, ₹29 லட்சத்து 97 ஆயிரத்து 319 வசூல் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது.

மேலும், முறையான ஆவணங்கள் இன்றி இயங்கிய 228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓவர் லோடு ஏற்றிவந்தது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கியது, சிக்னல்களில் எல்லைக்கோட்டை தாண்டியது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டியது என மொத்தம் 6,167 ஓட்டுனர்களின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன்  கூறுகையில், ‘விபத்துகளைத் தடுக்க ஓட்டுனர்கள் அரசின் விதி முறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...