×

தூய்மை நகரங்களின் பட்டியலில் நாமக்கல்லை தக்கவைக்க ஆன்லைனில் ஓட்டு வேட்டையாடும் நகராட்சி அலுவலர்கள்

நாமக்கல், ஜன.20:   தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க, நாமக்கல்லில் ஆன்லைனில்  பொதுமக்களின் ஓட்டுகளை பெற நகராட்சி அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள நகரங்களில், நாமக்கல் நகரம் தூய்மை நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.நாமக்கல் நகராட்சியில் செயல்படுத்தப்படும் சுகாதாரம், சாலை சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்ற பணிகளை தரம்பிரித்து ஆவணங்களின் அடிப்படையில் நாமக்கல் நகரம் தூய்மை நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் நகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஸ்வச் சர்வேஷன் 2020(சுத்தமான கணக்கெடுப்பு 2020) என்ற பெயரில் ஆன்லைன் மூலம் புதிய கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது.

இதற்காக கூகுல் பிளே ஸ்டோரில் மத்திய அரசு வோட் பார் யுவர் சிட்டி என்ற புதிய ஆப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பை டவுன் லோடிங் செய்து அதில் சென்று பொதுமக்கள் வாக்களிக்கவேண்டும். அதில், நாமக்கல் நகரத்தின் செயல்பாடுகள் குறித்த 8 கேள்விகள் இடம்  பெற்றுள்ளது. இந்த கேள்விகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் பதில்களை அடிப்படையாக வைத்து நாமக்கல் நகராட்சிக்கு 1500 மதிப்பெண்கள் வரை கிடைக்க உள்ளது. இதற்கு நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் ஆன்லைனில் ஓட்டுபோட வேண்டும். நாமக்கல்  நகராட்சியில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களை நாமக்கல் நகராட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்ய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை நாமக்கல் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி ஒருவர் ஒரு ஓட்டு மட்டுமே போட முடியும் என்பதால், நகராட்சி அலுவலர்கள் தனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், நகரில் உள்ள பொதுமக்களை சந்தித்து இது குறித்து விளக்கி ஓட்டு கேட்டு வருகிறார்கள். நகரில் உள்ள பொதுமக்களும் கூகுல் பிளே ஸ்டோரில் வோட் பார் யவுர் சிட்டி என்ற ஆப்பை டவுன்லோடிங் செய்து ஓட்டு போடும் படி நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : cities ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...