புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழா இன்று துவக்கம்

புதுக்கோட்டை, ஜன.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழா இன்று துவங்கி வருகிற 27ம்தேதி வரை நடைபெறுகிறது. கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி வருகிற 27ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. முதல் நாளான இன்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பெண்கள் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டை நகரில் அரசு பொது வளாக அலுவலக வளாகத்தில் இருந்து நடைபெற உள்ளது. அனைத்து முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பின் முக்கியவத்துவத்தை சாலை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சாலை பாதுகாப்பு வாரவிழாவின் நோக்கம் ஆகும். 2வது நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

மேலும் சாலை விதிகளை மீறுவோருக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து சாலை பாதுகாப்பு வார விழாவின் 3வது நாளில் பள்ளி மற்றும் கல்லூரி பஸ் ஓட்டுனர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் தனியார் நிறுவனம் ஓட்டுனர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. 4வது நாள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, சிறந்த சாலை பாதுகாப்பு வாசகத்திற்கான போட்டி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளன. 5வது நாளில் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நடைபெற உள்ளது. 7வது நாளில் அதிவேகம், அதிக பாரம், தலைகவசம் அணியாமல் பயணித்தல், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் குறித்த சிறப்பு வாகன சோதனை நடைபெற உள்ளது. மேலும் இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்கருக்கு தேநீர் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது. 8வது நாளில் வாகன விற்பனை முகவர்கள், ஒட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மற்றும் நடத்துநர்களின் ஊர்வலம் நடத்துதல். சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். 27ம்தேதி வரை நடக்கிறது.

Tags : Road safety festival ,Pudukkottai ,
× RELATED சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...