ஆண்டு தோறும் பெயரளவிற்கு தான் நடக்கிறது மழைநீர் தொட்டி கணக்கெடுப்பு மாவட்டத்தில் முறையாக நடக்குமா?

சிவகங்கை, ஜன. 19: சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் பெயரளவிற்கே நடந்ததால் எவ்வித பயனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இடைப்பட்ட 10ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283மி.மீ மழை பெய்தது. 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2012ம் ஆண்டு 549மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. 2014ம் ஆண்டு 920மி.மீ மழை, 2015ம் ஆண்டில் 1097மி.மீ மழை, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பதிவானது. கடந்த 2017ம் ஆண்டில் 976.6மி.மீ மழை, 2018ம் ஆண்டில் 924.4மி.மீ மழை, 2019ம் ஆண்டு 1006.7மி.மீ மழை பதிவாகியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 2008ம் ஆண்டிற்கு பிறகு சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் மி.மீட்டரை கடந்து மழை பெய்தது. அதிகப்படியான மழை பெய்தும் நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது உள்ளிட்டவைகளுக்கு மழைநீர் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று சேராததே காரணம்.

இதனால் அதிக மழை பெய்தும் எவ்வித பயனும் இல்லாமல் போனது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மழை நீர் சேமிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. மழை நீர் சேமிப்பு தொட்டிகள் இல்லாத வீடுகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கடுமையாக அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பின்னர் போதிய கண்காணிப்பில்லாமல் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.மழைநீர் சேமிப்புக்காக கட்டப்பட்ட தொட்டிகள் அனைத்துப்பகுதிகளிலும் இருந்த இடமே தெரியாமல் தூர்ந்து போனது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கணக்கெடுப்பு மற்றும் வீடுகளில் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசுத்துறை சார்ந்த அலுவலக கட்டிடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி குறித்த கணக்கெடுப்பு நடந்தது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாததால் கணக்கெடுப்பால் எவ்வித பயனும் இல்லாமல் போனது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் பல மாவட்டங்களில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.  குறைந்து வரும் நீராதாரங்கள் காப்பாற்றப்படும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் கண்காணிப்பு, பராமரிப்பில்லாமல் பயனின்றி போனது. அரசு அலுவலகங்களிலேயே அரசு அறிவித்துள்ளது என்பதற்காக சம்பிரதாயத்திற்காக செய்தனர். இதனால் தனியார் நிறுவனங்கள், வீடுகள் கட்டுவோர் இதை கண்டுகொள்ளவே இல்லை. ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என அதையும் பெயரளவிலேயே செய்கின்றனர். அறிவிப்பிற்காக இல்லாமல் சமூக நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இத்திட்டம் வெற்றியடையும். திட்டத்தை பெயரளவில் இல்லாமல் நிரந்தரமாக செயல்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளை அரசு செய்யவேண்டும் என்றார்.

Tags : district ,
× RELATED இந்தியாவுக்கு 84-வது இடம்