சமத்துவ பொங்கல் விழா பள்ளிகளில் கோலாகலம்

சிவகங்கை, ஜன.14:  சிவகங்கை மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கட்டாயமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொங்கல் விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதுபோல் அனைத்து கல்லூரிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறப்பாடல், கும்மிப்பாடலுடன் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. சிவகங்கை மகளிர் கல்லூரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் முன்பும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சிறப்பாக கொண்டாடினர்.

Tags : Equality Pongal Festival ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா