×

பாலம் அமைக்கும் பணிக்காக சாலை அடைப்பு ஊரைவிட்டு வெளியேற முடியாமல் 4 கிராமமக்கள் தவிப்பு மாற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தல்

காரைக்குடி, டிச.16: காரைக்குடி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாற்றுப்பாதை அமைக்காமல் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் நான்கு கிராமமக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். காரைக்குடி அருகே சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தேவரிப்பட்டி, நெற்புகபட்டி, வடக்குதெரு, தெற்குதெரு ஆகிய கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான சாலையாக உள்ள பள்ளத்தூர் முதல் குன்றக்குடி வரை செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு மேல் இரண்டு புறங்களிலும் 5 மீட்டருக்கு மேல்  விரிவாக்கம் செய்யப்பட்டு 3 கி.மீ மேல்  சாலை அமைக்கப்பட உள்ளது. மிகவும் மோசமான நிலையில் இருந்த 9 பாலங்கள் புதிதாக கட்டப்பட உள்ளன. நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மாற்றுப்பாதை அமைக்காமல் திடீர் என பணிகளை துவங்கியதோடு மக்கள் பயன்படுத்தி வந்த பாலங்களையும் உடைத்துள்ளனர். இதனால் தேவரிப்பட்டி, நெற்புகபட்டி, வடக்குதெரு, தெற்குதெரு ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊரை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தவிர மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு 4 நாட்களாக செல்லமுடியாத நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து சூரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து கூறுகையில்,  பள்ளத்தூர் முதல் குன்றக்குடி சாலை பணி துவங்கியதை முன்னிட்டு 9 பாலங்களை மாற்றுவழிப்பாதை ஏற்படுத்தாமல் பிரித்துபோட்டுள்ளனர். இந்த பள்ளத்தில் இரண்டு பேர் விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர ஆம்புலன்ஸ் கூட ஊருக்கு வரமுடியாத நிலை உருவாகி உள்ளது. நேற்று முன்தினம் ஆம்புலன்சில் ஆபத்தான நிலையில் ஒருவரை கொண்டு சென்ற போது பள்ளத்தில் பதிந்து கொண்டது. வாகனத்தை எடுப்பதற்குள் ஆபத்தான நிலையில் இருந்தவர் இறந்துவிட்டார். தவிர கொத்தரியில் இருந்து இந்த கிராமமக்களுக்கு நான் ஊராட்சி தலைவராக இருந்தபோது கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பணியால் அந்த பைப்லைன் துண்டித்துவிட்டனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கிராம மக்கள் தீவில் இருப்பது போல் உள்ளனர். மாற்றுவழிப்பாதை ஏற்படுத்தி சாலை பணியை துவங்க வேண்டும். அமைச்சர், மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சேகர் (தேவரிப்பட்டி) கூறுகையில், சாலைபோடுவது வரவேற்கக் கூடியது. 9 பாலத்தில் தற்போது 3 பாலத்தை ஒரே நேரத்தில் பாலங்களை உடைத்துள்ளனர். கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்தையும் தடுத்துள்ளனர். மாற்றுப்பாதை என மண்ணை மட்டும் கொட்டி உள்ளனர். நடந்து கூட செல்ல முடியவில்லை. உடல் நிலை சரியில்லாதவர்களை தூக்கி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எந்த அதிகாரிகளிடம் சொல்வது என தெரியவில்லை. யாரும் வந்த பணியை பார்க்கவில்லை என்றார்.
சண்முகசுந்தரம் கூறுகையில், இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தானில் படிக்கின்றனர். சாலைபணியால் மாணவர்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. 3 கி.மீ நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பைப் லைன் உடைக்கப்பட்டதால் குடிக்ககூட தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டு வருகிறோம். மாற்றுப்பாதை அமைத்து விட்டு சாலை பணி துவங்க வேண்டும் என்றார்.


Tags : bridge ,construction ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!