×

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய பரிந்துரைகள் லாரி தொழிலை பாதிக்கும்

நாமக்கல், டிச.13: இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மோட்டார் வாகன சட்டத்தின், புதிய பரிந்துரைகள் லாரி தொழிலை பாதிக்கும் என்பதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய பரிந்துரைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் அமல்படுத்த இருக்கிறது. புதிய பரிந்துரைகள், கடந்த வாரம் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் லாரி தொழிலை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்களை பாதிக்கும் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தலைமையில், பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர உள்ள புதிய சட்டங்கள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி. நேற்று செயலாளர் வாங்கிலி, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  சுந்தர்ராஜன், எல்பிஜி சங்க துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஆட்டோ நகர் அசோசியேசன் தலைவர் பழனிசாமி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர், அங்குள்ள பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டனர். பின்னர், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி நிருபர்களிடம் கூறியதாவது: லாரி விபத்துக்குள்ளானால், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் தரவேண்டும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. விபத்தில் சிக்கிய லாரியை பழுது பார்த்து, உதிரிபாகங்களை மாற்றினால், அதற்கான தேய்மானம் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டோட்டல் லாஸ் என்ற முறையில் விபத்துக்குள்ளான லாரியை செட்டில் செய்யும்போது, வண்டியின் ஆர்சியை சரண்டர்  செய்தால் தான், முழு இழப்பீடு கிடைக்கும்.

இதுவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உடனடியாக பெற முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி எப்சி, டிரைவிங் லைசென்ஸ் தான் முக்கிய ஆவணமாகும். ஆனால், புதிய விதிமுறையில் சட்டத்தில் உள்ள அனைத்து ஷரத்துக்களும், சரியாக பின்பற்றினால் தான்,  இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தால் லாரி உரிமையாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெற முடியாது. இதன் மூலம் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். புதிய லாரி வாங்கினால் தான் பழைய லாரிக்கு இழப்பீடு தரப்படும் என நடைமுறைக்கு உதவாத பல புதிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது. இவற்றை நீக்க மாவட்ட கலெக்டர், மத்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு வாங்கிலி தெரிவித்தார்.

Tags : insurance companies ,
× RELATED கொரோனா சிகிச்சைக்கான செலவையும்...