×

உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுபெட்டிகள் தயார் மானாமதுரை ஒன்றியத்தில் பணிகள் தீவிரம்

மானாமதுரை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலுக்காக மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுபெட்டிகளை பழுதுநீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலின்போது அமைக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளிலும் கவனம் செலுத்தி அதற்கான பணிகளை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில்  கிராம ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் என நான்கு ஓட்டுக்களை கிராமத்தினர் பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஊராட்சி பகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு பழைய முறைப்படி இயங்கும் ஓட்டுப் பெட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட 145 ஓட்டுச் சாவடிகளுக்கு, தேவையான ஓட்டுப் பெட்டிகள் பழைய கூட்ட அரங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நேரத்தில் இவற்றில் எந்தவித பிரச்னைகளும் ஏற்படாமல் இருப்பதற்காக  முன்னரே பழுதுபார்க்கும் பணிகள் துவங்கியுள்ளது.மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சிப் பணியாளர்கள்  பழுதாக இருந்த பெட்டிகளை சரிசெய்வயும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூறுகையில், ‘ஓட்டுசாவடிக்கு அனுப்பி வைக்கப்படும் இப்பெட்டிகள் கடந்த  2011ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 5 ஆண்டுகளாக அப்படியே வைக்கப்பட்டிருந்ததால் பெட்டிகளை சரிசெய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதையடுத்து பெட்டிகளை இலகுவாக திறந்து மூடுவதற்கும், ஓட்டுப்பதிவிற்குபின் லாக் செய்யும் பகுதியை சீர்செய்யும் பணியும்,  துருப்பிடித்திருந்த பெட்டிகளுக்கு வண்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.  லாக் செய்யும் கம்பி இணைப்புகளுக்கு எண்ணெய் ஊற்றி சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு சரிசெய்யப்பட்ட ஓட்டுபெட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சரிபார்த்து ஆய்வு செய்வதற்காக அனைத்து பணிகளையும் முடித்து பெட்டிகள் தயார் நிலையில் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன’ என்றனர். தமிழக தேர்தல் ஆணையத்தின் மூலம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன் டான்சி நிறுவனம் மூன்று அளவுகளில் இரும்பு ஓட்டுப்பெட்டிகளை வழங்கியுள்ளன. அவற்றில் டான்சி ஸ்பெஷல், டான்சி மீடியம், டான்சி ஸ்மால் என 475 பெட்டிகள் சரிசெய்யப்பட்டு ஓட்டுசாவடிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

Tags : elections ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டி?: குஷ்பு பேட்டி