2 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு

கும்பகோணம், டிச. 13: கும்பகோணம் 11வது வார்டு மந்திரி சந்தில் 2 மாதமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை அகற்றாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு மந்திரி சந்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவும், அடித்தட்டு மக்களாகவும் உள்ளனர். மேலும் அந்த சந்தில் 30 குழந்தைகள் படிக்கும் சத்துணவு மையம் உள்ளது. இந்த தெருவில் கடந்த 2 மாதத்துக்கு முன் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 2 மாதமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் பயனில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.கும்பகோணம் மந்திரி சந்தில் 2 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றி அப்பகுதியை சுகாதாரமாக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி அலுவலகத்தில உள்ள ஆணையர் அலுவலகத்துக்குள் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags :
× RELATED சரபங்கா ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடும் துர்நாற்றம்