×

மீனவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு மீனவ பஞ்சாயத்தில் முடிவு

மயிலாடுதுறை, டிச.13: மயிலாடுதுறை அருகே விசைப்படகில் வெளியூர் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவரிடம் ரூ.20லட்சம் கேட்டு ஊரை விட்டு விலக்கி வைத்ததால் ஆர்டிஓவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் லட்சுமணன்(55). இவரது மருமகன் சந்திரமோகனுடன் இணைந்து விசைப்படகு வைத்து சீசனுக்கு ஏற்றவாறு பல்வேறு மீனவ கிராமங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருவது வாடிக்கை. கடந்த ஆண்டு ஊர் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் பஞ்சாயத்தார்கள் லட்சுமணன் விசைப்படகை வெளியூர் சென்று மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். வெளியூருக்குச் சென்று தொழில் செய்தால்தான் எங்களால் வாங்கிய கடனைதிருப்பிக் கட்ட முடியும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதனால் அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தனர். பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக தொழில் செய்யும் கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தொடர்ந்து மீன்பிடித்தொழிலுக்குச் சென்றுள்ளனர். கிராம பஞ்சாயத்தார் லட்சுமணன் குடும்பத்தாரை அழைத்து எங்களது கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டீர்கள், அதனால் உங்கள் குடும்பத்தாருக்கு நீரும் நெருப்பும் தரக்கூடாது என்று கடுமையான உத்தரவிட்டு தண்டோரா மூலம் தெரிவித்தனர். அப்படி கட்டுப்பாட்டையும் மீறி யாராவது நடந்தால் ரூ.1 லட்சம் அபராதம் கட்டவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மீண்டும் லட்சுமணன் குடும்பத்தை அழைத்து திட்டி எங்கள் பேச்சுக்குக் கட்டுப்படாததால் ரூ.20 லட்சம் அபராதம் கட்டவேண்டும் என்று தீர்ப்பு கூறினர். இதனால் மனம் வெறுத்துப்போன அக்குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். லட்சுமணனின் மருமகள்கள் இருவர் பிஎட் படிக்கும் கல்லூரிக்கு சென்றபோது ஊர் பஞ்சாயத்தை சேர்ந்த ஒருவர் எங்களை திட்டி பாலியல் ரீதியாக தொல்லைகளை கொடுத்து வந்தார். இதனால் இரண்டு நபர்களும் தங்களது படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டனர். இதுகுறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பஞ்சாயத்தார் காவல்நிலையம் சென்று லட்சுமணன் குடும்பத்தாரை எரித்துக்கொன்று விடுவோம் என்று காவல் நிலையத்திலேயே மிரட்டினர். இருந்தும் இதை போலீசார் கேட்கவில்லை. இருதரப்பினரும் சமாதானமாக பேசிவிட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டனர். தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நேற்று மதியம் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தலைமையில் லட்சுமணன் குடும்பத்தினர் ஒன்று திரண்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் சென்று, ஆர்டிஓ மகாராணியிடம் புகார் அளித்தனர். அதில் பூம்புகாரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள்மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்திடவும், கட்டப்பஞ்சாயத்தில் போடப்பட்ட அபராத தொகை ரூ.20 லட்சத்தை ரத்து செய்திடவும், கல்லூரி சென்றுவரும்போது லட்சுமணன் மருமகள்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் வழக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தாகவும், ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்டிஓ மகாராணி தெரிவித்தார்.

Tags : fisherman panchayat ,town ,fisherman ,
× RELATED துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது...