×

‘வேட்புமனுவுக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்’ அதிகாரிகளின் முரண்பட்ட தகவலால் குழப்பம்

சிவகங்கை, டிச. 12: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் ஆவணங்கள் குறித்து ஒவ்வொரு அதிகாரியும் வெவ்வேறு தகவல்களை தெரிவிப்பதால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் டிச.27 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு டிச.27ல் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர், கல்லல் ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு டிச.30ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் டிச.9ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய டிச.16ம் தேதி கடைசி நாள் ஆகும். மனு பரிசீலனை டிச.17ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு வாபஸ் பெற டிச.19ம் தேதி கடைசி நாளாகும்.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் ரேசன் கார்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட சில ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் கட்டாயம் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் இல்லா சான்று பெற வேண்டும் என வேட்பு மனு விண்ணப்பம் வழங்கும் சில அதிகாரிகள் கூறுகின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குத்தான் இந்த சான்று தேவை. மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் வேட்பாளர் குடியிருக்கும் ஊராட்சியில் நில வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை பாக்கி இல்லை என கடன் இல்லா சான்று பெற்றால் மட்டும் போதும் என கூறப்பட்டுள்ளது. அதுபோல் வேட்பாளர் தாக்கல் செய்யும் அபிடவிட்டில் அவர் மீது வழக்கு இருந்தால் மட்டும் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் போட்டியிடுபவர்கள் அனைவரும் அவர்கள் மீது வழக்கு இல்லையென்றாலும் வழக்கு இல்லா சான்று சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்கள் மூலம் ஆன்லைனில் பெற வேண்டும் என அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். இந்த சான்று பெற சுமார் ரூ.700 வரை தேவைப்படுகிறது. போலீஸ் ஸ்டேசன்களில் கேட்டால் இதுபோல் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரிகளும் ஒவ்வொரு சான்று வேண்டும் என கூறுவதால் வேட்பு மனு பெறுபவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், வேட்பு மனு வழங்குபவர்கள், பெறுபவர்களுக்கு உரிய உத்தரவை வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கூறியதாவது, ‘ஒவ்வொரு அதிகாரிகளும் முரண்பாடான வெவ்வேறு தகவல்களை சொல்லி ஆவணங்களை கேட்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த சான்றிதழை வழங்கவில்லையெனில் மனு நிராகரிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வேட்பாளர்கள் எந்த ஆவணங்களை வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெளிவான உத்தரவை வெளியிட வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...